தமிழகம் முழுவதும் உங்கள் ஊரில், உங்களை தேடி என்ற திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து துறை அலுவலர்களும், மக்களை தேடிச் சென்று அவர்களது குறைகளை கேட்டு அறிந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


இதனை அடுத்து தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் இன்று உங்கள் ஊரில் உங்களைத் தேடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். 


அப்பொழுது மொரப்பூர் காவல் நிலையத்தில் திடீரென நுழைந்து காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காவல் நிலையத்தில் கண்காணிக்கப்படுகின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள், ஆண், பெண் கைதிகளுக்கு, தனித்தனியாக உள்ள அறைகள், பதிவேடுகள், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகள் உள்ளிட்ட அவற்றை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது பதிவேடுகளில் பதிவு செய்துள்ளது குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது போக்சோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்த வழக்குகள் குறித்த விவரங்களை பார்வையிட்டார். 


அப்பொழுது பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள புகார் மனுக்களின் விவரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்படவில்லை, வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என ஒரு சில வழக்குகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் வழக்கு பதிவு செய்வதோடு, நிறுத்தி விடாமல் அதனை முழுமையாக விசாரணை செய்து அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செல்போன் கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், இதோடு வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடாமல், செல்போன் கிடைக்கின்ற வகையில் அதனை பாலோப் பண்ண வேண்டும். அதேபோல் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அவர்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அந்தப் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 


அதேபோல் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் ஏன் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. காவல் நிலையத்தில் இவ்வளவு பேர் பணியாற்றி வந்தும், குற்றவாளிகளை கைது செய்யவில்லை.  


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு காலதாமதம் ஏன் செய்தீர்கள்? வெறுமனே புகார்களின் மீது வழக்கு பதிவு செய்துவிட்டோம் என்று இல்லாமல் ஆர்வத்தோடு வழக்குகளை முடிக்கும் நோக்கில் வேலை பார்க்க வேண்டும்.  அதேபோல் பள்ளியில் படிக்கின்ற பருவங்களில் காதல் திருமணம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால், அந்தப் பகுதியில் ஏன் விழிப்புணர்வு கொடுப்பதில்லை.  


நாளை மறுநாள் முதல் தினந்தோறும் ஒரு பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளை அமர வைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் நிலையத்தில் இத்தனை பேர் பணிபுரிந்தாலும் வழக்குகள் முழுவதும் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. சாதாரண கிராம புறத்தில் உள்ள காவல் நிலையம்தான், தென் மாவட்டங்களில் உள்ளது போன்று அடிக்கடி இந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதில்லை. பெண் குழந்தைகள் எதிரான சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த காவல் நிலையத்தில் உங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கோபமாக தெரிவித்தார்.


மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீரென காவல் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்து காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.