தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக சீண்டல் சம்பவம் அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்தில் 113 போ ஸ்கோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். 


தர்மபுரி வளர்ந்து வரும் மாவட்டமாகும். இங்கு வேலை வாய்ப்பு தொழில் வளம் மிக குறைவாக உள்ளதால் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வெளியூரில் தங்கி வேலை செய்து வருபவர்கள் தங்களது குழந்தைகளை பெற்றோர் மற்றும் உறவினர் பராமரிப்பில் சொந்த ஊரிலேயே விட்டு செல்கின்றனர். இத்தகைய சூழலில் பெண் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதாக கூறி திருமண வயதுக்கு முன்பே அதாவது 18 வயதுக்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.


குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தாலும் இளம் வயது திருமணங்கள் ரகசியமாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது நடந்து வருகிறது. இளம் வயது திருமணத்தில் சிறுமிகள் கர்ப்பம் தரித்து பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவமனை நிர்வாகம் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.


அதே நேரம் தர்மபுரி மாவட்டத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு மற்றும் பாலியல் வன்கொஉமை சம்பவங்களுக்கு அதிக அளவில் நடக்கிறது. சிறுமியின் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.


சமீப காலமாக தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 31 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையேயும் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை மையங்களில் இருந்து பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


இந்நிலையில் சட்டம் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, டிஎஸ்பி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், சிறப்பு போக்சோ அரசு வழக்கறிஞர், குழந்தையின் நல குழு உறுப்பினர், நன்னடத்தை அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் 113 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 126 போக்சோ வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் 11 போக்சோ வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.


அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பள்ளி ஆசிரியர், ஆசிரியர்களும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.