தருமபுரி நகரில் அமைந்துள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் தண்ணீரில்லாமல், முறையாக பராமரிக்கப்படுதில்லை. இதனால் கழிவறைகளை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.




 


சில மாணவர்கள் சிறுவர்களாக இருப்பதால், தண்ணீரில்லாத கழிவறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் தூர் நாற்றம் வீசி வருகிறது. மேலும் நம் மாவட்ட விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகாமையில் இருப்பதால் ஏராளமானார் இந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வெளி பகுதியில் இருந்த இளைஞர்கள் விளையாடுவதற்கும் அதியமான் கோட்டை பள்ளி வளாகத்திற்கு வருகின்றனர். இங்கு வரும் வெளி ஆட்கள் கழிவறைகளை முறையாக பயன்படுத்தாமல் நாசம் செய்து விடுகின்றனர். இதனால் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கழிவறை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் பள்ளிக்கு யாரும் வருவதில்லை. 


இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களின் கழிவறைக்குள் நாய் இறந்து, புழு மேய்ந்த நிலையில், துர்நாற்றம் வீசி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. மேலும் ஒரு சில கழிவறைகளில் அதிகளவு செடி, கொடிகள், புற்களும் வளர்ந்து, விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள் மேம்பாட்டிற்காக அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி, தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான கழிவறைகளை தூய்மைப்படுத்தி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் சுகாதாரமான முறையில் கழிவறைகளை முறையாக பராமரிக்க தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்ற கழிவறைகளை தூய்மைப்படுத்தி, முறையாக பராமரித்த கூடுதல் நிதிகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.