தருமபுரி அடுத்த பழைய தருமபுரி, சவுளூர் பகுதியில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், 24 மணி நேரமும் பரபரப்பாக இருந்து வரும் பகுதியாக இருந்தது வருகிறது. இந்நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.


அந்த இளைஞரை கிராம மக்கள் நீண்ட நேரமாக கண்காணித்துள்ளனர். அப்பொழுது அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரை விசாரித்துள்ளனர். மேலும் மொழி தெரியாமல் முழித்ததால், கிராம மக்களுக்கு சந்தேகம் வலுவானது. இதனால் குழந்தை கடத்தும் கும்பல் ஊருக்குள் சுற்றுவது போல, இவரும் குழந்தை கடத்துவதற்கு ஏதேனும் வந்திருப்பாரோ என்று கிராம மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அப்போது இந்த இளைஞருடன் 3 பேர் வந்ததாகவும், அங்கு விளையாடி கொண்டிருந்த சில குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த சவுளூர் பகுதி மக்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து தாக்கி, அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்துள்ளனர். மேலும் சிலர் அந்த இளைஞரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். ஆனால் இந்தியை தவிர வேறு மொழி தெரியாததால், கிராம மக்கள் எதற்காக அடிக்கிறார்கள் என்பது தெரியாமல், அந்த இளைஞர் செய்வதறியாது திகைத்துள்ளார்.
     


இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து வந்த நகர காவல் துறையினர், மின் கம்பத்தில் கட்டி வைத்திருந்த வடமாநில இளைஞரை மீட்டனர். தொடர்ந்து கிராம மக்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களோ, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தாலோ, அவர்களை பற்றி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும். இதுபோன்று விவரம் தெரியாமல் அவர்களை தாக்குவது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபடக் கூடாது. இவ்வாறு புதுமுகமான நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து தாக்குவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினர்.


இதனை தொடர்ந்து வட மாநில இளைஞரை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வடமாநில இளைஞர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அந்த பகுதிக்கு எதற்காக வந்தார், அவருடன் எத்தனை பேர் வந்திருந்தனர் என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி பகுதியில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.