தருமபுரி மாவட்டம் அரூர் டவுன் பஞ்சாயத்தில் 18 வார்டுகள் உள்ளது. இதில் அம்பேத்கர் நகரில் 3 வார்டுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஜெயபால் நகர் பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டும், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குடிநீர் குழாய் அமைப்பதற்காக, சிமெண்ட் சாலை வெட்டி எடுக்கப்பட்டு குடிநீர் குழாய்களை அமைத்துள்ளனர். இதனால் அந்த கான்கிரீட் சாலை சேதமடைந்துள்ளது. இதனை டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்காததால், சாலை ஆங்காங்கே பழுதாகி குண்டு, குழியுமாக மாறியது.


இந்த வழியில் அவசர தேவைக்கு ஆட்டோ உள்ளிட்ட வண்டிகள் வர முடிவதில்லை. இந்த வழியில் நடந்து செல்ல கூட முடியாமல், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்லும் முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.



அதேபோல் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால், கழிவு நீர், கால்வாயில் வெளியேற வழியில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர், ஆற்றுக்கு செல்ல வழி இல்லாமல், ஆங்காங்கே தேங்கி நின்று, துர்நாற்றம் வீசியும், கொசு உற்பத்தி ஆகிறது. 


இதனால் குழந்தைகள் அதிகமாக இருப்பதால் கொசுவால், நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் நகர் மக்கள் அரூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


மேலும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதற்கு, துப்பரவு பணியாளர்கள் வருவது இல்லை. எனவே அரூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடக்கின்ற சாலையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் ஆற்றுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயபால் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, “அரூர் அம்பேத்கார் நகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்யவும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க, அதிகாரிகளை அனுப்பி விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.