காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தர்மபுரி  மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அறிவுறுத்தல். கர்நாடகா, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை  எட்டியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த 10 நாட்களாக  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடியிலிருந்து 1.30 லட்சம்  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக  காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.


இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 62000 கன அடியாக இருந்தது. தொடர்ந்த மாலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு  95,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து  1,00,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி, ஒகேனக்கல் பகுதியில் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் தண்ணீர் மூழ்கியுள்ளது.


தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று 12-வது நாளாத பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் நீர்வரத்து அதிதரிக்கும் என்பதால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திகி. சாந்தி அறிவுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.