தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது:


காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவே இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட மண்டல நிர்வாகிகளை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான மாற்றங்கள் இருக்கும்.


தமிழகத்தில் இந்தியாவில் இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. இதில் 379 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு பெற்றுள்ளது. இதில் 100 தொகுதிகளை கூட பாஜக பேராவது என தெரிந்தவுடன் இப்பொழுது இஸ்லாமியர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவதற்கு என்ன காரணம். மோடி சரண் அடைந்துள்ளார். இஸ்லாமிய பெருமக்களிடம் நரேந்திர மோடி மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சில் எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இதைத்தான் எங்களது தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். பாஜக என்பது வெறுப்பு அரசியலுக்கான கட்சி. ஆர்எஸ்எஸ் உடைய சித்தாந்தம் என்பது மனிதநேயத்திற்கு எதிரானது. இதை அகற்ற வேண்டும்.  முதல் கட்ட தேர்தலில் எருமை மாடு அரசியலை பேசினார். சாதி அரசியலை பேசினார். இரண்டாம் கட்ட தேர்தலிலே, 2 அறைகள் இருந்தால் ஒரு அறைகளை இன்னொருவருக்கு கொடுப்பார் என்று பேசினார். பாகிஸ்தான் அரசியல் பேசினார்.


மூன்றாம் கட்ட தேர்தலில் பிரிவினை வாதத்தை பற்றி பேசினார். ஒருவர் சொத்தை இன்னொருத்தருக்கு கொடுத்து விடுவார்கள் என்று சொன்னார். மலைவாழ் மக்களுடைய அரசியலை பேசினார். இப்பொழுது நான்காம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை என்று சொல்லுகிறார். எதற்காக சிஏஏ சட்டம், என்ஆர்சி சட்டமும் இரவோடு இரவாக விவாதம் இன்றி நிறைவேற்றினார். இதுதான் நரேந்திர மோடி உடைய பாஜக உடைய உண்மையான முகம்.


இதுதான் வாக்கு அரசியல், வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக இப்பொழுது குட்டி கர்ணம் அடிக்கிறார் மோடி. இஸ்லாமியர்களை பற்றி வெறுப்பு அரசியல் பேசியவர், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும், ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று பாஜக உடைய அமைச்சர்கள் பேசினார்கள். அமித்ஷா பேசினார். இப்பொழுது இஸ்லாமியர்களிடம் எதற்காக மன்றாடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இந்த தேசத்திற்கான தேர்தலை நடத்தவில்லை. இன்னும் நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம், ஆறாம் கட்டம் என தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இவர்கள் என்னென்ன உண்மைக்கு மாறாக பேசினார்கள் என்பதெல்லாம் தெரியும். அப்பொழுது மன்னிப்பு கேட்க போகிறார். அந்த காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  


தருமபுரி சமூக நீதிக்கான மண். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எந்த நோக்கத்திற்காக வன்னியர் சங்கம் ஆரம்பித்தாரோ, எந்த நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவினாரோ,  ஆனால் சமூக நீதியை சூறையாடுகின்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி, சமூக நீதியை விழுங்குகின்ற கட்சி, சமூக நீதியை அழிக்கின்ற கட்சி, சமூக நீதிக்கு எதிரான கட்சி பாரதிய ஜனதா கட்சி. இந்த கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் வன்னிய பெருங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து அதிமுக அவர்களை ஏமாற்றியது. சட்டப்பேரவையில் அதனை ஆதரித்து பேசியவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டிய இயக்கம் காங்கிரஸ் கட்சி, நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டிய தலைவர் ராகுல் காந்தி. எந்த நோக்கத்திற்காக 21 பேர் வன்னிய போராளிகள் தன் உயிரை கொடையாக இந்த சமூகத்திற்கு கொடுத்தார்களோ, அவர்கள் ஆன்மாக்கள் எல்லாம் தலைவர் ராகுல் காந்தியை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த போராட்டத்தின் குரலாக தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார். அவர் சாதி வாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என்று சொல்லுகிறார். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பத்தாண்டுகளாக புறந்தள்ளிய கட்சி பாஜக, நரேந்திர மோடி, அவர்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமை படி அதிகாரத்தின் படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பட்டியலியலின மக்களுக்கும் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை யார் சூறையாடுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள், நரேந்திர மோடியின் பாஜக. ஆனால் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். நீங்கள் ஒரு முறை இதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தருமபுரி மண்ணிலிருந்து நான் அவரை கேட்டுக் கொள்வது, உங்களுடைய கொள்கை கோட்பாட்டை பேசுபவர் தலைவர் ராகுல் காந்தி.  அவர்களை தானே நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும். எதற்காக இந்த இமாலய தவறை செய்தார்கள் என்று புரியவில்லை. ஒருமுறை உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வரம்பு மீறினால் ஊடகங்களுக்கும், சரி அரசியல் கட்சிகளுக்கும் சரி, எழுத்துரிமை பேச்சுரிமையை கொடுத்ததே காங்கிரஸ் பேரியக்கம். அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது.  ஆனால் பேச்சுரிமை எல்லா உரிமை இருக்கு என்பதற்காக வரம்பை மீறக் கூடாது. சவுக்கு சங்கர் வரம்பை மீறி பேசி இருக்கிறார். பெண் காவலர்களை பற்றி பேசி இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்ற ஊழியர்களை பற்றி கொச்சையாக பேசியதற்காக, அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மனித உரிமை மீறக் கூடாது. கையை உடைத்தார்கள் என்பதை எல்லாம் அனுமதிக்க கூடாது. வரம்பையும் மீறக் கூடாது, மனித உரிமையையும் மீறக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான வாழ்க்கை போடக்கூடாது. உண்மைக்கு புறமான வழக்காக இருந்தால் அது கண்டிப்பாக வருந்தத்தக்கது. காவல் துறை கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.