தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


அண்மையில் பென்னாகரம் வனத்துறையினர் மற்றும் காவலர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தன்னார்வ அமைப்பினர் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.


இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை தமிழகம், பாண்டிச்சேரி சமூக செயல்பாட்டு இயக்க மாநில முதன்மைச் அமைப்பாளரும், மாநில ஆதிவாசிகளின் ஐந்தாவது அட்டவணைக்கான பிரச்ச சார் ரங்கநாதன் தலைமையில் மாநில மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் தென்பாண்டியன், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், மனித உரிமை ஆர்வலர் செந்தில் ராஜா, தலித் பெண்ணுரிமை கூட்டமைப்பு லட்சுமி, சமூக ஆர்வலர் கென்னடி ஆகியோர்கள் அடங்கிய மனித உரிமை ஆர்வலர் குழுவினர் நேரிடையாக வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று, வனத் துறையினரின் நடவடிக்கைகள், அணுகுமுறைகள், கிராம மக்களின் கோரிக்கைகள், தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது வனத் துறையினரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். வனப் பகுதியில் உள்ள மீனவர்களின் வீடுகள் இடித்து ஆக்கிரமிப்பு என கொடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வனத் துறையினர் யாரும் பதில் அளிக்கவில்லை. அப்பொழுது மனித உரிமை ஆர்வலர்கள் வனத் துறையினரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வனப்பகுதி ஆக்கிரமிப்பு என கூறி, இந்த மக்களை வெளியேற்றியுள்ளனர்.


மேலும், மாற்று இடமாக வருவாய்த் துறையினர் பென்னாகரம் அருகில் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காவிரி ஆற்றை நம்பியிருக்கின்ற தங்களுக்கு ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற இடங்களில் இடம் ஒதுக்கினால் போதும், தினமும் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.  


மேலும், வனத் துறையினரால் வீடு இடிக்கப்பட்ட இடத்திலேயே, பாதிக்கப்பட்டோர் தற்காலிகமாக குடிசை போட்டு தங்கி வருகின்றனர்.