தொடர் மழையால் கர்நாடக அணைகளில் நீர்தகறப்பு அதிகரிப்பு-தமிழகத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 56,000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு-7-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை.




காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது‌.  இதனில் இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் கபினியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 52,000 கன அடியாகவும், நுகு அணையில் 5,000 கன அடி மொத்தம் 77, 000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை  நீர்வரத்து  வினாடிக்கு 54,000 கன அடியாக குறைந்திருந்த நீர்வரத்து, மாலை படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 56,000 கன அடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு 74,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.


மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, ஐந்தருவிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.


இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ஆனால் கபனியில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக, தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர், படிப்படியாக குறைத்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக இருப்பதால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல், ஏமாற்றமடைந்து, ஆற்றங்கரையோர பகுதியில் ஆங்காங்கே நின்று தண்ணீரின் அழகை கண்டு ரசித்து விட்டு  திரும்பிச் செல்கின்றனர்.