தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு சுகாதாரத் துறை என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடிச்சு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் தருமபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரதிபுரம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக் கணக்கான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கலந்து மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல் துறையினர், மாவட்ட விளையாட்டு அலுவலர், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் மத்தியில் பேசிய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை தொட்டால் எதிர்கால வாழ்வு சீரழிந்து விடும். போதைப் பொருளை பயன்படுத்தினால் நமது உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு வாழ்நாளே குறுகிவிடும்.
போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் அரிதாக மாறிவிடும். எனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் எவ்வித போதை பொருட்களும் பயன்படுத்தாத வகையில் மாணவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கம் உள்ளவர்களை நாம் அனைவரும் இணைந்து அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இதனை மாணவர் சமுதாயம் தான் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.