தருமபுரி அருகே ராஜாபேட்டையில் கான்காலனி பகுதியைச்  சேர்ந்தவர்  பெருமாள்-விஜயா தம்பதிக்கு ரேவதி (37) என்ற மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். மேலும் விவசாயியான பெருமாள் தன் மகள் ரேவதி குழந்தையாக இருக்கும் பொழுதே உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். இந்த நிலையில் விஜயா கூலிவேலைக்கு சென்று தனது மகள் ரேவதியை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கான்காலனியில் 95 சென்ட் விவசாயம் நிலம் உள்ளது.


மேலும், ரேவதிக்கும், பழனி என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பழனி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரேவதியின் திருமண  செலவிற்காக விஜயாவுக்கு பணம் கொடுப்பதாக கூறி, அவரது உறவினர்களான அத்தை கோவிந்தம்மாளின் வாரிசுதாரர்கள் செல்வி, அன்பழகன் ஆகிய 2 பேரும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது செல்வியும், அன்பழகனும், தாய் மற்றும் மகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது.  இந்த நிலையில் பெருமாள் கூட பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர்.


இதில் குடும்ப சொத்தை பிரிப்பதற்காக சென்னையில் உள்ள ரேவதி சித்தப்பா ஆறுமுகம்  என்பவர் பெருமாளின் அண்ணன் காளி, மற்றும் தம்பி உள்பட  அனைத்து உறவினர்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.


அப்போது பெருமாளின் மகள் ரேவதி அங்கு சென்றபோது, உனக்கு சொத்தில் பங்கு ஏதுமில்லை என கூறி, தகாத வார்த்தையால் திட்டி உறவினர்கள் விரட்டியதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் பெருமாளின் குடும்ப  சொத்தை பிரித்து தரக்கோரி தருமபுரி எஸ்.வி.சாலையில் ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரவு பதிவுத் துறை அலுவலகத்திற்கு பெருமாளின் அண்ணன், தம்பி மற்றும் உறவினர்கள் வருவதையறிந்த ரேவதி அங்கு வந்து சொத்தில் தனக்கு பங்கு உள்ளது எனக்கூறி தடங்கல் மனுவை கொடுத்தார்.


அப்போது ரேவதிக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, சொத்து கொடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் உறவினர்கள் தன்னை ஏமாற்றியாதாக கூறி, ரேவதி பதிவாளர் அலுவலகத்தின் மாடிக்கு சென்று மாடியில் இருந்து கீழே எகிறி குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்று ரேவதியை பிடித்து இழுத்து காப்பாற்றினர். இதில் ரேவதி மயிரிழையில் உயிர் தப்பினார்.


இதைத்தொடர்ந்து ரேவதி பத்திரவு பதிவுத்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து, தங்களை சொத்தை பதிவு செய்யக்கூடாது, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வெயிலையும் பொருட்ப்படுத்தாமல், விம்பி, விம்பி அழுதுக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தண்ணீர் கொடுத்தால் கூட வாங்காமல், போராட்டம் நடத்தினார்.  இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை செய்வதாக, சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ரேவதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


மேலும் இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில், மற்றொருவர் வழக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரி பதிவாளர் அலுவலகத்தில், பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.