தமிழர்களின் உணவில் சிறு தானியங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இதனால் அன்றைய நமது முன்னோர்கள் நூறு வருடம் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்தனர்.
நாளடைவில் இது படிப்படியாக குறைந்து உணவு முறையை மாற்றி இன்றைய சூழலில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற நோய்களை மக்கள் அதிக அளவில் சந்தித்து வருகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த நமது பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவு முறைக்கு மாறி வருகின்றனர். உணவு பழக்க வழக்கங்களிலும் இன்றைய இயந்திர வாழ்க்கையில் துரித உணவாலும் கேழ்வரகு சாமை, கம்பு மற்றும் வரகு உள்ளிட்ட சிறுதானிய பயன்பாடு குறைந்து வந்தது.
இந்நிலையில் உடல்நலம் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வால் சிறுதானியங்கள் மீது இளைய தலைமுறையினருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சந்தை நிலவரத்தை பொறுத்து சிறுதானிய சாகுபடி பரப்பும் கூடுதல் ஆகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிறுதானிய வகைகள் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக கம்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது கம்பில் லட்டு வகைகளும், பிஸ்கட் வகைகளும் அதிக அளவில் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். உணவு பதார்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் விவசாயிகளின் சாகுபடி இரட்டிப்பாக உள்ளது. வெளிநாடுகளிலும் கம்பின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் இது நாள் வரை தங்களது வீட்டு தேவைக்காக மட்டும் கம்பு பயிரிட்டு அறுவடை செய்து வந்தனர். தற்போது சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் கூடுதலாக சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய பயிர்களான கம்பு மற்றும் ராகி சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. உணவு பொருட்களில் கம்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளதால் சாகுபடி செய்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கம்பு பயிர் அதிக வறட்சியை தாக்கி பூமி குறைந்த ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. மழை இல்லாமல் வளர்ச்சி நேரத்தில் கூட வளரக்கூடியது. குறுகிய காலத்தில் குறைந்த செலவில் அதிக வருமானம் தருகிறது. இந்த கம்பை அதிக அளவில் விவசாயிகள் பங்குனி பட்டத்தில் விதைப்பார்கள். தற்போது பங்குனி பட்டத்தில் விதைத்த கம்பு செழித்து வளர்ந்துள்ளது. இந்த கம்பு பயிரை நோய் தாக்காது என்பதால் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் செலவு இல்லை.
எனவே கிருஷ்ணகிரி தர்மபுரி போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கம்பு பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகள் பயிரிட்ட கம்பு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது.