தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு நடத்தப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குருமன் இன மக்களின் பாரம்பரிய வழிபாடு – நூற்றக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்
பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பழங்குடி குருமன இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தங்களுடைய பாரம்பரிய திருவிழாவான தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்த பாரம்பரிய திருவிழாவில் இராஜகுலம், சாமந்தி குலம், எருமைக் குலம், வண்டிகாரன் குலம் உள்ளிட்ட குலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குல தெய்வமாக வழிபடும் வீரபத்திரன் சாமிக்கு ஆடி முதல் நாளிலிருந்து 18-ம் நாள் வரை விரதம் இருந்து திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல்வேறு பழங்குடிகளின் ஒற்றை திருவிழா
இந்த திருவிழாவில் குருமன் இன மக்களின் அனைத்து குலத்தினரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து ஒன்றிணைந்து, இந்த திருவிழாவில் கலந்துக் கொண்டனர். இதில் குருமன்ஸ் மக்கள் தங்களது பாரம்பரிய தொழிலான ஆடு மேய்த்தல், கம்பளி நெய்தல் உள்ளிட்டவைகளை நினைவுப்படுத்தும் விதமாக, குல காவல் தெய்வம் வீரபத்திரன் சாமியை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
சிறப்பு பூஜையில் பங்கேற்ற குருமன் இன மக்கள்
அப்பொழுது கம்பளி, ஆடுகளின் உருவம், ஆடு மேய்க்க பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கையில் எடுத்துக் கொண்டும் சிலர் ஆடு மேய்க்க செல்வது போல் உடை அணிந்து கொள்வது, பொருட்களை கையில் எடுத்துச் சென்று வனப் பகுதியை நோக்கி சென்றனர். தொடர்ந்து வனப் பகுதியை ஒட்டி உள்ள ஒரு விவசாய நிலத்தில், வீரபத்ர சுவாமி மற்றும் இந்த பாரம்பரிய பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து வீரபத்திர சாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்த பின், மேளதாளங்கள் முழங்க வீரபத்திரன் சாமியை அழைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
துள்ளி குதித்து மண்டியிட்ட பக்தர்கள் – பரவச நிலையில் மக்கள்
அப்பொழுது அனைத்து பக்தர்களும், அகோ வீரபத்திர என கூறிக்கொண்டே துள்ளி குதித்து வந்து, மண்டியிட்டனர். அவ்வாறு மண்டியிடும் பக்தர்கள் தலைமீது மஞ்சள் வைத்து, தேங்காய்க்கு மஞ்சள் தெளித்துவிட்டு தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
இதில் இங்கு கூடியிருந்த பக்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனில் பங்கேற்று, தேங்காய் உடைத்துக்கொண்டனர். பின்னர், சாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த சாமி ஊர்வலத்தின் போது சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாட்டையால் அடிவாங்கினால் குலம் சிறப்பாக இருக்கும் நம்பும் மக்கள் சாட்டையடி வாங்கினர். தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது, வீரபத்திர சாமியை இளைஞர்கள் சாமி எடுத்துக் கொண்டு, காலில் சலங்க கட்டிக் கொண்டு, பராம்பரிய நடனம் ஆடினர்.
காலில் சலங்கை கட்டி ஆடும் சடங்கு – சிறுவர்கள் முmதல் பெரியவர்கள் வரை உற்சாகம்
அப்போது சிறுவர்கள், பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் காலில் சலங்கை கட்டிக் கொண்டு பாரம்பரிய நடனமாடினர். இந்த குருமன்ஸ் பழங்குடி மக்களின் பாரம்பரிய திருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த திருவிழாவால், பாப்பிரெட்டிப்பட்டி-பொம்மிடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வழக்கமான பணிக்கு செல்வோர் சற்று சிரமப்பட்டனர். கோயில் திருவிழா என்பதால் அதனை பெரிதாக அவர்கள் கண்டுக்கொள்ளாமல் மானசீகமாக வணங்கிய காட்சிகளையும் பார்க்க முடிந்தது.