ஆடி மாத புது மழையில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல, நெல்மணிகள் விளைச்சல் அடைய வேண்டும் என்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் விவசாயிகள்.




தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கு பருவத்திற்கு ஏற்ற விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ஆடிப்பட்டம் தேடி விதை என்று ஆடி மாதத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அதில் குறிப்பாக நெல் நாற்று விடப்படும்.


இந்த ஆடிப்பெருக்கு தினத்தில் நாற்று விட்டால், மழை பொழிந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போல, நெல்மணிகள் நன்கு விளைச்சல் அடைந்து, நல்ல மகசூல் கொடுக்கும். அதே போல் ஆடிப்பெருக்கு தினத்தில் நாற்று விடும்பொழுது நோய் தாக்குதல் இல்லாமல், மருந்தில்லாமல், இயற்கை முறையில் நல்ல வளர்ச்சி அடைந்து மகசூல் கிடைக்கும் என்பதால் ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாயிகள் நெல் நாற்று விடுவது வழக்கம்.


மேலும் பருவ மழை வருகின்ற பொழுது தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.


இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமி ஆக பெரும்பாலும், பருவ மலைகளை நம்பி சிறுதானியங்கள் உள்ளிட்ட வறட்சிக்கேற்ற பயிர்களையே சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் வரக்கூடிய வடகிழக்கு பருவமழை  பொய்த்து போனதால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகியது குடிநீருக்கே மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது.  


இதனால் எந்த பயிரையும் விவசாயிகள் சாகுபடி செய்யாமல் இருந்து வந்தனர். இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பு, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது கன மழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் பருவமழை கை கொடுக்கும் என நம்பி ஆடிப்பட்டத்தில் நெல் நாற்று விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதில் தருமபுரி, ஒடசல்பட்டி, கடத்தூர், பொம்மிடி, அரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஆடிப்பெருக்கு தினத்தில், நிலத்தில் பூஜை செய்து சாமியை வணங்கி, விவசாயிகள் நெல் நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே இந்த நாற்றுகளை நடவு செய்ய முடியும். மழை வரவில்லை என்றால், இந்த நாற்று முழுவதும் பயனில்லாமல் போய்விடும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஆடிப்பெருக்கு தினத்தில் நெல் நாற்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.