மகனின் எதிர்கால வாழ்வை வளமாக்க தந்தை கட்டிய கட்டடமே, மகனின் வாழ்வை பறித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். பிரபல வியாபாரியான அவர், படித்து முடித்த தனது 24 வயது மகனான டயான் ராஜூக்கு ஏதாவது தொழில் துவங்கித் தர முடிவு செய்தார். பல்வேறு தொழில்களை சிந்தித்த நிலையில் இறுதியாக டைல்ஸ் கடை வைத்து தர ஒருமனதாக முடிவு செய்தார். 





அதற்காக சிவகாசி அண்ணாநகர் பகுதியில் கடைக்கான புதிய கட்டுமானப்பணியை துவக்கினார். கிட்டத்தட்ட பணிகள் நிறைவடையும் தருவாயை நெருங்கிய நிலையில், மேலே ‛ஸ்லாப்’ ஒன்று அமைக்கப்பட்டு 15 நாட்களே ஆன நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் முட்டுகளை ஆணைக்கூட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி கருப்பசாமி(40) என்பவர் பிரித்துள்ளார். 




அருகில் இருந்து டயான்ராஜ் அப்பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஸ்லாப் இருவர் மீதும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய இரு சடலங்களையும் மீட்ட சிவகாசி கிழக்கு காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துமனை கொண்டு சென்றனர். 


ஆசை மகனின் எதிர்காலத்தை பொற்காலமாக மாற்ற தந்தை எடுத்த முயற்சி, மகனின் உயிர் பறிபோக காரணமான நிலையில் டயன்ராஜ் குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.