உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு கமிஷனின் இரண்டுநாள் செயல்முறை விளக்கக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் திரத் சிங் ரகாவத் தொடங்கிவைத்தார். நிகழ்வில் அவர் பேசியவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. கிழிந்த ஜீன்ஸ்களை அணிவதால்தான் சமூகம் சீர்கேடு அடைகிறது, இதுபோன்ற காரணங்களால் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள் என அவர் பேசியுள்ளார். அவர் பேசியதன் தொகுப்பு கீழ்வருமாறு:
கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முட்டியைக் காண்பிக்கும் பெண்கள் என்.ஜி.ஓ. நடத்துகிறார்கள்!
“நாகரிகம் என்கிற பெயரில் கிழிந்த உடைகளை அணிந்து வலம்வருவது, முட்டி தெரிய ஆடை அணிந்து தங்களைப் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலக் காட்டிக் கொள்வது.இதுதான் இன்றைய தலைமுறையின் பண்பாடாக இருக்கிறது.வீடுகள் இல்லாமல் வேறு எங்கே அவர்களுக்கு இந்தச் சுதந்திரம் கிடைக்கிறது, பள்ளிகளும் ஆசிரியர்களும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிழிந்த உடை அணிந்து திரியும் என் வீட்டுப்பிள்ளையை நான் எங்கே அழைத்துச் செல்லமுடியும்? இவையெல்லாம் மேற்கத்திய நாகரிகம் படுத்தும் பாடு. அங்கிருக்கும் மக்கள் யோகா கற்றுக்கொள்கிறார்கள், முழுதாக உடை அணிகிறார்கள். நாம் இப்படி அம்மணமாகத் திரிகிறோம். பெண்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. நான் ஒரு பெண்ணை அண்மையில் சந்தித்தேன் அவர் என்.ஜி.ஓ ஒன்றை நடத்துகிறார். என்னைச் சந்திக்க வந்தவர் முட்டி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்திருந்தார். இவர் போன்ற பெண்கள் சமூகப்பணியாளராக இருக்கும்போது இவரிடமிருந்து சமூகம் தவறான விஷயங்களைக் கற்றுக்கொள்ளாதா? நாம் செய்வதைதானே நமது பிள்ளைகளும் பின்பற்றுவார்கள்.நாம் தவறான உதாரணமாக இருந்தால் பிள்ளைகளும் தவறானதைதான் செய்வார்கள். பிள்ளைகள் போதைக்கு அடிமையாவது எல்லாம் இப்படித்தான் உருவாகிறது. நாம் எவ்வளவு நாகரிகமாக இருந்தாலும் வீட்டில் நல்ல பழக்கங்களைக் கற்றுத்தரும்போது அந்தச் சூழலில் வளரும் பிள்ளை வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லை” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
திரத் சிங் ராவத் ஒரு வாரத்துக்கு முன்புதான் உத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.