கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

 

கொரோனா தொற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகம் பரவி வருவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும், 6069 நபர்கள் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் குறைக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது. 

 

ஐந்து நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றதால், ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அதன்படி கும்பகோணம் பகுதியில் உள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி நகராட்சி பள்ளி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் மையங்களில் காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்டனர். 



இதனால் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில்  காலை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி வள்ளிக்கண்ணு (40) தடுப்பூசி செலுத்துக் கொள்ளவதற்காக  வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வள்ளிக்கண்ணு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் விரைந்து வந்து வள்ளிக்கண்ணுவை பரிசோதித்தனர். இதில் வள்ளிக்கண்ணு இறந்துவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

பின்னர் அங்கு வந்த வள்ளிக்கண்ணுவின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் கிராமப்புறங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படுவதை சுகாதாரத்துறையினர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.