கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருப்பதை தவிர்த்து, தாமதமின்றி சேர்க்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் 15 படுக்கைகள் கொண்ட ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது. அதேசமயம் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் அவசியமாக உள்ளது. இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது.



கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் இல்லாத்தால், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி இருந்ததால், நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்க கால தாமதம் ஏற்பட்டது. பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது சூலூரை சேர்ந்த 86 வயது முதியவர் மூச்சுத் திணறலால் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தார். இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையிலும், நோயாளிகள் தாமதமின்றி சிகிச்சை பெறும் வகையிலும் கோவை அரசு மருத்துவமனையில் ’ஜீரோ டிலே’ வார்டு அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.






இதன்படி கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி ஆக்சிஜன் கிடைக்க வசதியாக கோவை அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய ‘ஜீரோ டிலே’ என்ற சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையும், சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.


இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், “கொரோனா தொற்றுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்றுடன் வரும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படுபவர்கள் உடனடியக ஜீரோ டிலே வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு நோயாளிகளை பரிசோதித்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவை உள்ள நோயாளிகள் பிரிக்கப்படுவர்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும். குறிப்பாக ஆக்சிஜனுக்காக நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது. இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் கான்சன்ரேட்டஎ என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி வெளிக்காற்றை உள்வாங்கி நைட்ரஜனை பிரித்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும். இதனால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.