அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசு பெற மறுத்த இளம்பெண் யோகதர்ஷினியின் காளை கோவை ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று தங்க காசை பரிசாக தட்டிச்சென்றது.  மதுரை மாவட்டம், ஐராவதநல்லூரை சேர்ந்த முத்து‌ என்பவரது மகள் யோகதர்ஷினி. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். யோகதர்ஷினியின் தந்தை பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சிறு வயது முதலே  தந்தையுடன் சேர்ந்து காளைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த யோகதர்ஷினிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார் யோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடிமாடாக போனது. அப்போது அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக் குழுவினர் ஆறுதல் பரிசு வழங்க அழைத்தனர். ஆனால், அதனை வாங்க மறுத்து யோகதர்ஷினி அங்கிருந்து வெளியேறினார். 




விழாவில் சிறப்பு விருத்தினராக பங்கேற்க வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி யோகதர்ஷினியை பரிசு வாங்கிச் செல்லும்படி கூறினார். ஆனாலும், அப்பரிசினை வாங்காமல் யோகதர்ஷினி சென்று விட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த ஆண்டும் இதே போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யோகதர்ஷினி தனது காளையை களமிறங்கிய போது விழாக் குழுவினர் ஆறுதல் பரிசு வழங்க அழைத்த போது, அதனைப் பெற மறுத்து காளையோடு வெளியேறினார். அப்போது முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வாங்குவதற்காக அழைத்த போதும் அதனை ஏற்காமல் சென்றார். 




இந்த நிலையில் முதன் முறையாக முத்து கருப்பு என்ற தனது காளையை கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வந்தார் யோகதர்ஷினி. 529வது மாடாக யோகதர்ஷினியின் காளை முத்து கருப்பு களம் இறங்கியது. அப்போது யார் கைகளிலும் சிக்காமல் துள்ளி குதித்து ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, யோகதர்ஷினிக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. யோகதர்ஷினியின் காளை நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடவில்லை என்றாலும், அவரை ஊக்குவிக்கும் வகையில்  தங்க காசு பரிசாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தங்கக் காசு பரிசாக பெற்று சென்றார்.




இது குறித்து யோகதர்ஷினி கூறும்போது, ”கடந்த 6 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் எங்களது காளைகளை பங்கேற்ற செய்து வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளை பங்கேற்று உள்ளது. முதல் முறையாக கோவை ஜல்லிக்கட்டில் எனது காளை பங்கேற்று பரிசுகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது”  என அவர் தெரிவித்தார்.