கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் வசித்து வருபவர் பஞ்சலிங்கம். 53 வயதான இவர் லாரி உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில் பஞ்சலிங்கம், வீட்டில் இருந்த போது இன்னோவா காரில் ஐந்து பேர் வந்துள்ளனர். அவர்கள் ’நாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்’ எனக் கூறி வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் வீட்டை தாளிட்டுக் கொண்டு சோதனை செய்வது போல நடித்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 15 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டதுடன், சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யையும் எடுத்துச் சென்றனர். வருமான வரித் துறை அதிகாரிகள் என வந்தவர்களின் நடவடிக்கைகளில் பஞ்சலிங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து பஞ்சலிங்கம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.
கோவை - பொள்ளாச்சி சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள் வந்த வாகனத்தின் பதிவு எண் தெரியவந்தது. இதனை கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் கற்பகம் பல்கலைகழகம் அருகே அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்ட பிரவீன்குமார், மணிகண்டன், மோகன்குமார் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த சதீஸ், ராமசாமி, ஆனந்த், தியாகராஜன் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேத்யூ, மகேஸ்வரன், பைசல் ஆகிய 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்