கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணையில் காட்டு யானைகள் நீச்சலடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவதும், இதனால் பயிர் சேதமும், உயிர் சேதமும் நடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதி 958 சதுர கிலோ மீட்டர் கொண்டதாக உள்ளது. இப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது.


வால்பாறை அருகே உள்ள நல்லமுடி பூஞ்சோலை, மூடீஸ், சிறுகுன்றா, பழைய வால்பாறை, ரொட்டிகடை பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி கிராமப் பகுதிகளுக்குள் வருவதும், ரேசன் கடைகளை உடைத்து அரிசி சாப்பிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக காட்டு யானைகளை கண்காணிக்க வனத் துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


 





வால்பாறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் சோலையாறு அணை அமைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது அழமான அணையான சோலையாறு அணை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள முதன்மையான நீர்த் தேக்கமாக உள்ளது. இந்த அணையை சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு காட்டு யானைகள் சோலையாறு அணை பகுதிக்கு வந்துள்ளன. மண் மேட்டில் இருந்து தண்ணீருக்குள் அடுத்தடுத்து இறங்கிய இரண்டு காட்டு யானைகளும் நீச்சலடித்து சென்றுள்ளன. வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் நீச்சலடித்து உணவுக்காக வேறு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்தவர்களால் செல்போனில் படம் பிடித்துள்ளனர். யானைகள் அணையில் நீச்சல் அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண