கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் 78வது வார்டு பகுதியில் ஒப்பந்த துப்புறவு பணியாளர்களாக சுப்பிரமணி, தருமன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள ஆலமரமேடு என்ற பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கடந்த 19 ஆம் தேதியன்று மூவரையும் சாக்கடை அடைப்பை நீக்குமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியுள்ளனர். சாக்கடைக்கு உள்ளே இறங்காமல் அடைப்பை நீக்க முடியாது என பணியாளர்கள் கூறிய நிலையில், மேற்பார்வையாளர் மாணிக்கம் ’அடைப்பை நீக்கத் தான் உங்களை பணியில் வைத்துள்ளோம், இறங்கி சுத்தம் செய்யுங்கள்’ என உத்தரவிட்டுள்ளார். 



சுப்பிரமணி


இதையடுத்து சுப்பிரமணி உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி தனது வெறும் கைகளால் குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கி உள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து சுப்பிரமணி உள்ளிட்ட மூவரையும், தங்களது விருப்பத்தின் பேரில் தான் சாக்கடைக்குள் இறங்கியதாக கையெழுத்திட்டு தருமாறு மாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணியாளரை சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய துப்புரவு மேற்பார்வையாளர் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


இது குறித்து துப்புரவு பணியாளர் சுப்பிரமணி கூறுகையில், ”தர்மன், செந்தில் குமார் மற்றும் நான் சாக்கடை அடைப்பு எடுக்க சென்றோம். அங்கு இருந்த சூழ்நிலை காரணமாக சாக்கடைக்குள் இறங்கமால் அடைப்பை எடுக்க முடியாது எனச் சொன்னோம். அதற்கு தான் உங்களை அழைத்து வந்துள்ளோம் என மாணிக்கம் சொன்னார். தானாக தான் சுத்தம் செய்ததாக ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடுமாறு துன்புறுத்தினார்” என அவர் தெரிவித்தார்.




இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன துப்புரவு மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண