கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு எல்லையான தாளவாடி வனப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்ததால் மலை கிராம விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள அருள்வாடி, மல்லன்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட வனப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கர்நாடக மாநில வனத் துறையினர் இன்று தாளவாடி பகுதிக்கு விரட்டி அடித்தனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக,  தாளவாடி அருகே உள்ள அருள்வாடி பகுதியில் முகாமிட்டுள்ளன. யானைகள் பகல் நேரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வந்ததால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காட்டு யானைக் கூட்டத்தை தாளவாடி வனத் துறையினர் மீண்டும் கர்நாடகா வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இதேபோல சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக  முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் கடந்த 12ம் தேதி தாளவாடிக்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து 3 நாள்களாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மரியபுரம், சூசைபுரம், இரிபுரம் பகுதியில் நடமாடிய கருப்பனை பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் கருப்பன் யானை வனத்துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பியது. 16 நாள்களாக தாளவாடி திகினாரை முகாமில் தங்கியிருந்த 3 கும்கிகளின் பாகன்கள் தாய்லாந்து பயிற்சிக்கு செல்ல உள்ளதால், 3 கும்கிகளை மீண்டும் அந்தந்த முகாமுக்கு அழைத்து செல்ல வனத்துறை நடவடிக்கை எடுத்தது. 


முதற்கட்டமாக கலீம் யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது, அங்கிருந்த மக்கள் கருப்பன் யானை பிடிக்கும் வரை கும்கிகளைக் கொண்டு செல்லக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தெப்பக்காடு பகுதியில் இருந்து 3 கும்கிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாய்லாந்து செல்லும் பாகனகள் தடுக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் போராட்டம் நிறைவு பெற்றதை அடுத்து, லாரியில் ஏற்பட்ட கலீம் பொள்ளாச்சி டாப் சிலப் கொண்டு செல்லப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண