நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் பி.எம். 2 என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, குடியிருப்பில் உள்ள அரிசியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தது. மக்னா என அழைக்கப்படும் தந்தம் இல்லாத ஆண் யானை, கடந்த நவம்பர் 19 ம் தேதியன்று வாளவயல் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, பாப்பாத்தி என்ற மூதாட்டியின் வீட்டை இடித்து சேதப்படுத்தியது. மூலம் அந்த மூதாட்டியை பி.எம். 2 யானை தாக்கிக் கொன்றது. உறவினர்கள் இருவர் காயங்களுடன் தப்பினர். இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் உடற்கூராய்விற்காக காவல் துறையினர் உடலை எடுக்க முயன்ற போது, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனிடையே பி.எம். 2 யானை பிடிக்க கோரி கூடலூர் எம்.எல்.. பொன் ஜெயசீலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின், போராட்டத்தை கைவிட்டார். அப்போது பேசிய அவர், ”பந்தலூர், தேவாலா பகுதியில் பி.எம். 2 யானை கடந்த ஓராண்டில், 45 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. யானையை பிடித்து வேறு பகுதிக்கு விட வேண்டும் என, ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் யானையை பிடிக்கவில்லை என்றால் ஆட்கொல்லியாக உருமாறி மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதால், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.




இதற்கிடையே முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திலிருந்து யானையை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில் இந்த குழு பந்தலூர் பி.எம். 2 என்ற யானையை கூடலூர் வன கோட்டம் சார்பில் கும்கி யானைகளை பயன்படுத்தி மயக்க ஊசி செலுத்தி, 1972 வன விலங்கு சட்டத்தின்படி யானையை பிடிக்க வேண்டும். மேலும், யானையின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்த பின், அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் குழு உதவியோடு பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை புகைப்படம், வீடியோ எடுத்து சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து பி.எம். 2 யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக யானையை தொடர்ந்து வனப்பணியாளர் கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட காளன் என்ற வனபாதுகாவலர் அந்த யானை விரட்டியதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




இரண்டு குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் கடந்த 18 நாட்களாக யானயை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பி.எம். 2 என்ற மக்னா யானை புளியம்பாறை பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் தென்பட்டது. இதனைத் தொடர்ந்து யானையின் கால் தடத்தை வைத்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்த யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று புளியம்பாறை அருகே பி.எம். 2 யானையை பின் தொடர்ந்து வனப்பணியாளர்கள் உடன் சென்ற மருத்துவர் மயக்க ஊசி செலுத்தினார். பின்னர் மயக்கமடைந்த அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்த வனத்துறையினர், லாரியில் முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரை சுற்றியுள்ள பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வந்த பி.எம். 2 மக்னா யானை பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.