கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக கோவை வின்செண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.




கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 43 இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மேலும் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்... தெரிவித்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.




இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக் (39), உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் என்... அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குன்னூரில் உமர் பாரூக் வீட்டில் ஜமேசா முபின் இரகசிய கூட்டம் நடத்தியதும், அதில் தவ்பிக், பெரோஸ்கான் கலந்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் மூவரும் ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதும், தவ்பீக் இஸ்லாமிய அடிப்படைவாத புத்தகங்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட வெடிமருந்து தயாரிப்பு குறிப்புகளை வழங்கியதும் தெரியவந்தது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண