கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். அப்போது ஆட்சியர் சமீரன் வாசகர்கள் முன்பு தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தேன். முதுகுளம் என்ற குக்கிராமம் தான் எங்கள் சொந்த ஊர். அந்த கிராமத்தில் ஒரு நூலகம் உண்டு. அதில், மாதவ பணிக்கர் என்ற நூலகர் பகுதி நேரமாக பணி செய்து வந்தார். அவரது முழு நேரத் தொழில் முடி திருத்துவது. நூலகத்தை ஓட்டியே அவரது முடி திருத்தும் கடை இருந்தது. காலையில் அவரின் வேலையை கவனிப்பார். இடையிடையே வாசகர்கள் யாரேனும் வந்தால், நூலகத்தைத் திறந்து விடுவார். பருவ வயதினர் படிக்கும் புத்தகங்கள் இருக்கும் பகுதிக்குள், அந்த காலத்தில் சிறுவர்களை விடமாட்டார்கள்.


“இங்க வராதீங்க. அந்த பகுதிக்கு போய் அமர்சித்ர கதா படிங்க. பொன்னியன் செல்வன் படிங்க” என்று கூறி சிறுவர்களை மாதவ பணிக்கர் விரட்டிக் கொண்டிருப்பார். பருவ வயது வந்ததும், அந்த பகுதிக்குள் என்ன புத்தகங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. அந்த நாளும் வந்தது. அன்று, நிறைய தாடியுடன் ஒருவர் முடி திருத்துவதற்கு மாதவ பணிக்கர் கடைக்கு வந்திருந்தார். அந்த பணியில் பணிக்கர் பிசியாக இருந்தார். அப்போது நூலத்திற்குள் நுழைந்தேன்.


பத்மநாபன் நாயர் என்ற பம்மன் என்ற எழுத்தாளரின் ‘தம்புராட்டி’ என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. கையில் கத்தியுடன் முடி திருத்திக் கொண்டிருக்கும் மாதவ பணிக்கர் வாசலில் இருப்பாரே என்ற பயம் வந்தது.


’தம்புராட்டி’ புத்தகத்தின் மேலட்டையை நீக்கி விட்டு, வேறொரு பிரிவில் ஜான் ரீட் எழுதிய ‘உலகை உலுக்கிய 10 நாட்கள்’ புத்தகத்தின் அட்டையை எடுத்து போட்டுவிட்டேன். அதற்குள் முடி திருத்தம் செய்து விட்டு, மாதவ பணிக்கர் நூலத்துக்குள் வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் அட்டை மாற்றப்பட்ட தம்புராட்டி புத்தகத்தை கொடுத்தேன். அவர், அதை வாங்கி நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. புத்தகத்துக்கு அட்டை மாற்றியதைக் கண்டுபிடித்து விடுவாரா என்ற பயம்.


நல்ல வேளை அவர் கண்டுபிடிக்கவில்லை. புத்தகத்துடன் உற்சாகமாக புறப்பட தயாரானேன். அப்போது பின்னணியில் பணிக்கர் கரகர குரலில், “தம்பி, புத்தகத்தை திரும்பக் கொண்டு வரும்போது ஒரிஜினல் அட்டை போட்டு கொண்டு வாங்க” என்றார். அவ்வளவு தான் ஓடுவதா, நடப்பதா என்று தெரியாமல், எப்படியோ வீட்டுக்கு வந்தேன். “நான் புத்தகத்துக்கு அட்டை மாற்றியதை அவர் அறிந்து கொண்டார்” என்பதை நினைத்து, ஒழுங்காக அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை.


எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், புத்தகங்களை படிக்கப் படிக்கத் தான் ஆர்வம் அதிகரிக்கும். நல்லது, கெட்டது புரியும். பெற்றோர் தேவையில்லாமல் சிறுவர்களை அதைப்படி, இதைப்படி, அந்த மொழியைப் படி, இந்த மொழியைப் படி என்று வற்புறுத்தக் கூடாது. புத்தகங்கள் மட்டுமல்லாமல், ஒரு செய்தித்தாளில் வரும் சின்னச் சின்னச் கட்டுரைகளைக் கூட வாசிக்க வேண்டும். அது பிற்காலத்தில் எழுத்தாளராகக் கூட உதவும்” என அவர் தெரிவித்தார்.