மாநில அரசிடம் திட்டங்களை ஆளுநர் தெரிந்து கொள்வதில் எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை எனவும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது எனவும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதிமக்களை சந்தித்து நன்றி தெரித்தார். பின்னர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் குறைகளை கேட்டு நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து வருகிறேன்.




கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கிறது. மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசிடம் சட்ட மன்றத்தில் தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து முன்வைக்கபட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண உதவிகள்  அனுப்பப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்தார்.


சசிகலா தொடர்பான கேள்விக்கு, “சசிகலாவை வரவேற்பதும்,  வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை” என பதிலளித்தார். தமிழக அரசிடம் ஆளுனர் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, ”ஆளுநர் புதிதாக பதவியேற்றுள்ளார். மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார். தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கேட்டு இருக்கிறார். இதில் எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான்” என அவர் தெரிவித்தார்.


தலைமை செயலாளர் இறையன்பு அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசு துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த திமுக தற்போது ஆளுநருக்கு அடிபணிந்துபோய்விட்டதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.