கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் மற்றும் மலையடிவார பகுதிகள் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவதும், இதனால் பயிர் சேதமும், உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் ரேசன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பழகியதால், அவற்றை சாப்பிட வீடுகளை சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் உணவுகளை காட்டு யானைகள் உட்கொள்ள பழகியுள்ளன.




மருதமலை பகுதியில் வனத்தை ஒட்டிய மலையடிவார பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் காய்கறிகள், பழங்கள், உணவுகள் ஆகியவற்றை காட்டு யானைகள் உட்கொள்கின்றன. அப்போது பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட கழிவுகளையும் சேர்த்து உட்கொள்கின்றன. இதனால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் யானைகள் தொடர்ந்து பிளாஸ்டிக்கையும் சேர்த்து உண்ட நிலையில், அவற்றின் சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் குவியலாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





மருதமலை மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம் ஆய்வு செய்தார். அதில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இது குறித்து முருகானந்தம் கூறுகையில், ”மருதமலை அருகிலுள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் வனத்தை ஒட்டிய மலையடிவார பகுதியில் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. இந்த குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்றப்படாமல் உள்ளது.




குப்பைக் கிடங்கில் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகளில் மிச்சமாகும் பழங்கள், காய்கறிகள், உணவுகள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போட்டுவிடுகின்றன. பிளாஸ்டிக் கவர்களை பிரிக்காமல் யானைகள் அப்படியே சாப்பிடு விடுகின்றன. உணவுப் பொருட்கள் ஜீரணமானாலும், பிளாஸ்டிக்கள் வயிற்றுக்குள் தேங்கி விடுகின்றன. அவ்வப்போது சாணத்தோடு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் வெளியே வருகின்றன. அப்படி வெளியே வரவில்லை எனில் பிளாஸ்டிக்கள் சேர்ந்து கட்டி மாதிரி ஆகிவிடும். அதனால் யானைகளுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு உயிரிழக்கும் அபாயமும் இருக்கிறது.




குறிப்பாக 5 யானைகள் இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து அங்கிருந்து விரட்டி வருகிறோம். அதனையும் மீறி யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வருகின்றன. யானை மட்டுமின்றி காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவையும் குப்பைக் கிடங்கிற்கு உணவு தேடி வருகின்றன. மருதமலை வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும் குப்பைக் கிடங்கில் எளிதாக உணவு கிடைப்பதால், அங்கு தொடர்ந்து வருகின்றன. இது யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். எனவே குப்பைக் கிடங்கை இப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.