கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. அப்பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு  அமலபடுத்தப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்துள்ளனர். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.




இன்று காலையில் அப்பகுதி மக்கள் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி திராவிடர் கழகத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துத்துவா அமைப்பினர் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற செயல்களை இந்துத்துவா அமைப்பினர் கைவிட வேண்டுமெனவும் கூறிய அவர்கள், இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.




இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திராவிடர் கழகத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் செருப்பு மாலை அகற்றியதோடு, பெரியார் சிலையை சுத்தம் செய்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரியார் சிலைக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அக்காட்சிகள் அடிப்படையில் பெரியார் சிலையை அவமதித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.