மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமான இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூர் அருகே அடர் வனப்பகுதிகளும், முதுமலை புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் சில சமயங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும், சகதிக்குள் சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு



இந்த நிலையில் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தொடர்ந்து பிளிறிக் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்த போது, யானைக்கூட்டம் ஒன்று 30 அடி கிணற்றின் அருகே நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெண் யானை ஒன்று மட்டும் அங்கிருந்து நகராமல், வனத்துறையினரை துரத்தி உள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த யானையை விரட்டிவிட்டு, கிணற்றுக்குள் பார்த்த போது, குட்டியானை ஒன்று உள்ளே விழுந்திருந்தது தெரியவந்தது.


இதையடுத்து குட்டி யானையை மீட்பதற்காக கிணற்றுக்கு அருகில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டி குட்டியை மீட்க முயற்சித்தனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் குட்டி யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. குட்டி யானையை வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி