இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டர் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளது. செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், என பல பிரபலங்களும் இணைந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஒரு வார காலமாக லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. தசரா, ஆயுத பூஜை விடுமுறை, வார விடுமுறை என தொடந்து அடுத்த 6 நாட்கள் விடுமுறை தினமாக இருப்பதால் கிட்டதட்ட ஒரு வாரத்திற்காக டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இப்படியான நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் லியோ படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மாநில அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நள்ளிரவு முதலே தியேட்டரில் ரசிகர்கள் குவிய தொடங்கினர். எங்கு திரும்பினாலும் லியோ படத்தின் போஸ்டர், பேனர், கட் அவுட்கள், தோரணங்கள் என விடிய விடிய கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. இதனால் கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் பாலக்காட்டிற்கு படையெடுத்தனர். பாலக்காட்டில் உள்ள திரையரங்கில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் நடனமாடி கொண்டாடினர். மேலும் திரையரங்கு முன்பாக தேங்காய்கள் உடைத்தும், விஜய் படத்திற்கு பால் அபிசேகம் செய்தும் கொண்டாடினர். தொடர்ந்து உற்சாகத்துடன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டத்தில் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு லியோ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. இதற்காக காலை முதல் ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குவிந்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்த விஜய் ரசிகர்கள், திரைப்படத்தை காண சென்றனர். அப்போது பேசிய விஜய் ரசிகர்கள், “தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தாலும், திமுக இருந்தாலும் விஜய் படத்திற்கு பிரச்சனை வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பதிலாக, கேரளாவில் பிறந்திருக்கலாம். கேரளாவில் லியோ படத்திற்கு 4 மணிக்கு அனுமதி அளித்துள்ளார்கள். தமிழன் படத்தை தமிழன் பார்க்க முடியாது என்றால் என்ன நியாயம்? அவர்கள் யூடியூப்பில் ரிவியூ கொடுப்பதை நாங்கள் பார்க்க வேண்டுமா? தமிழ்நாடு அரசு 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்காதது விஜய் ரசிகர்களிடம் வருத்த்ததை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தனர். இதேபோல கோவையில் பல்வேறு திரையரங்குகள் முன்பாக குவிந்த விஜய் ரசிகர்கள் தேங்காய் உடைத்தும், குத்தாட்டம் போட்டபடியும் லியோ படம் பார்க்க சென்றனர். லியோ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திரையரங்குகள் முன்பாக பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.