கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று நடந்த தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேசிய விருது வாங்கியுள்ளனர். நேற்று இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 286 பேர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார்கள். இதுவரை இஸ்ரேலில் இருந்து 5 விமானங்கள் மூலம் 1180 பேர் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனனர். இதற்கு முன்பு உக்ரைன், சூடான் போர்களில் சிக்கிய இந்தியர்கள் பிரதமர் முயற்சியால் மீட்டு வரப்பட்டனர். இஸ்ரேலில் உள்ளவர்கள் ஆப்ரேஷன் அஜய் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் உள்ள 9 ஆயிரம் பேர் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சூழலுக்கு ஏற்ப விருப்பப்படுபவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
லியோ திரைப்படத்திற்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான கேள்விக்கு, “திமுக குடும்பத்தை சேர்ந்த பட்டத்து இளவரசர் எடுக்கும் படம், வெளியிடும் படம் மட்டுமே சினிமாவில் திரையிட வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். சினிமா துறையை முடக்க முயற்சிக்கின்றனர். சினிமா துறையை ஒரு குடும்பத்தின் கீழ் வைக்க முயற்சி நடக்கிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதா என்பதை தேர்தல் நேரத்தில் தான் சொல்வார்கள். ஆ.ராசாவின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான ஏஜென்சி. மக்களுக்கு சேவை செய்யாமல், மக்கள் பணத்தை சுரண்டுவது ஆ.ராசாவின் வாடிக்கை. மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒரு திமுக அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார். ஒரு எம்.பி. வீட்டில் அமலாக்க துறை சோதனை நடந்தது. திமுகவினர் மக்களுக்கு சேவை செய்யாமல், மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று வெளிநாடுகளின் எல்லைகளில் மீன் பிடிக்கிறார்கள். மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க கருவிகள் கொடுக்கிறோம். கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறோம். மீனவர்கள் ஆள்கடலில் மீன் பிடிக்க பல வசதிகள் செய்து தந்துள்ளோம். மீன் ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க முயற்சி எடுக்கிறோம். என் மண், என் மக்கள் யாத்திரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து பகுதி மக்களும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த யாத்திரையால் பாஜகவின் வாக்கு சதவீதம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாஜகவை சைத்தான் என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, ”எனக்கு தொண்டை சரியில்லை. இதற்கான பதிலை அதற்கான தலைவர்கள் தருவார்கள்” எனப் பதிலளித்தபடி கிளம்பிச் சென்றார்.