கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகின்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்பு ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”த.மா.கா 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறுகின்றது. நாளை மதுரை, திருச்சி மண்டல கூட்டங்கள் நடைபெறுகின்றது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் செயல்பட உறுதியான நிலையை ஏற்படுத்த இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது 2024 டிசம்பர் 31 க்குள் முதல்கட்ட தேர்தல் பணிகள், ஐனவரி 1 ல் இருந்து இரண்டாம் நிலை பணிகள், அதன் பின்பு தேர்தல் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும். த.மா.காவை எல்லா மாவட்டங்களிலும் பலப்படுத்த 120 மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
த.மா.கா.வினர் தங்கள் சொந்த பொருளாதார நிலையில் இருந்து கட்சியை நடத்துகின்றனர். துணை அமைப்புகளை வலுப்பெற செய்யும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு இருக்கின்றது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கின்றோம். 5 வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இந்த முறை பெரும்பாலான வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதன் நோக்கம் என்ன? குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தவறி இருக்கின்றார். மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றி பேசும் முதல்வர், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மத்திய அரசு அதிக பணம் கொடுக்க வேண்டும் என நாங்களும் எதிர்பார்க்கின்றோம். நிதி ஆயோக்கில் அமர்ந்து முதல்வர் தேவைகளை நேரடியாக கேட்டு இருக்க வேண்டும். முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தற்கு காரணம் அரசியல் மட்டுமே. நிதி ஆயோக் கூட்டம் முதல்வர் நேரில் சென்று அழுத்தமாக ஆலோசனை சொல்ல கூடிய இடம், அதை அவர் செய்ய தவறி இருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடி
மேற்குவங்க முதல்வர், ஜார்கண்ட் முதல்வர் பங்கேற்று இருக்கின்றனர். மக்கள் பிரச்சினையில் அரசியலை புகுத்த கூடாது. எல்லா மாநிலங்களுக்கும் மாற்றந்தாய் மனப்பான்மை இல்லாமல் மத்திய அரசு நிதி வழங்கி இருக்கின்றது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தேவையோ அதை மத்திய அரசு கொடுத்து இருக்கின்றது. தமிழகத்திற்கு நிதி வேண்டும் என்பது தமாகாவின் வேண்டுகோளும் கூட, தமிழகம் மட்டுமல்ல. பா.ஜ.க வெற்றி பெற்ற மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை. இன்று திமுக ஆர்ப்பாட்டம்செய்ய காரணம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாததது தவறு என்பதைக் மறைக்கவே நடத்தப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.
த.மா.கா இளைஞரணி தலைவராக இருந்த யுவராஜ் ராஜினாமா செய்தது குறித்த கேள்விக்கு ஆவேசம் அடைந்த அவர், “கட்சியில் மறு சீரமைக்கப்பட்டுளளது. எல்லா நிர்வாகிகளிடம் பதவியை ராஜினாமா செய்து கொடுத்து மறுசீரமைப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.குறையை மட்டும் பத்திரிகையாளர்கள் வேகமாக கண்டு பிடிக்கின்றீர்கள். குடும்ப ரீதியாக கட்டுப்பாடாக, கூட்டுக்குடும்பமாக இருக்கும் கட்சி த.மா.கா. பதவிகள் மாற்றம் என்பதை விட கூட்டு குடும்பம் போல பதவிகளை மற்றவருக்கு பரிமாறி கொடுத்துள்ளோம். ராஜினாமா செய்த நிர்வாகிகளும் எங்களுடன் தான் இருக்கிறார்கள்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”தாமக கட்சிக்கு பொருளாதார நெருக்கடி இருக்கிறது, அதையும் மீறி நேர்மையான நிர்வாகிகளுடன் கட்சியை நடத்துகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் சிறப்பாக செயல்படுகின்றது. மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அரசு ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கோவை பாலக்காடு சாலை, எல் & டி சாலையினை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும். சேலம் பெரியார் பல்கலை கழக நிர்வாகம் பற்றி சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களிக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.