ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2-ஆம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கோர ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் தவறான நிர்வாகத்தை கண்டித்தும், ரயில்வே அமைச்சர் பதவி விலக கோரியும், கோவை உக்கடம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ,  மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.


அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியும், ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிட திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், “இரயில்வே துறையின் நிர்வாக குளறுபடியே ஓடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு காரணம். இதை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. ஒடிஷா கோர ரயில் விபத்துக்கு காரணமான ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு ரயில்வே துறையினை  முறையாக பராமரிக்காமல் சீரழித்துள்ளது. இரயில்களில் பாதுகாப்பு கருவிகளுக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும்,  கருவிகளை ரயில்களில் மத்திய அரசு பொருத்தவில்லை.


ரயில்வேயில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பவில்லை. ரயில்வே ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர். இவற்றைப் பற்றி கவலைப்படாமல் வந்தே பாரத் போன்ற ரயில்களை விடுவதாக சொல்லி விளம்பரம் தேடுவதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.


இதேபோல பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நீண்ட காலமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண