பெண்களுக்கு எதிராக நிகழும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரிக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டுமென்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சூலூர் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் சுல்தான்பேட்டை, செட்டிபாளையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளை உள்ளடக்கி இந்த மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தை தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் நேரில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டிஐஜி விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், சூலூர் காவல் நிலையத்தில் எண்ணற்ற வழக்குகள் மகளிர் தொடர்பாக வருகிறது எனவும், இந்த வழக்குகள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது பொதுமக்களின் வசதிக்காக சூலூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அனைத்து உட்கோட்டத்திலும் விரைவில் மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்படும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். மகளிர்கள் எந்த நேரத்திலும் மகளிர் காவல் நிலையங்களை அணுகி சைபர் தொடர்பான குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்