திருப்பூரில் பள்ளியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் குன்னாங்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். தி.மு.க. இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள இவர், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செம்பாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவினாசி மதுவிலக்கு காவல் துறையினர் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து தினசரி நாளிதழ்களில் வெளியான செய்திகளை சரவணபிரசாத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவினாசியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என்ற தலைப்பிட்டு பதிவு செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தியை தவறாக சித்தரித்து தி.மு.க. கட்சிக்கும், கட்சியினருக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் விதமாக தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைப்போல் தகவல் பரப்பிய சரவணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சைபர் கிரைம் காவல் துறையினர் காஞ்சீபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த சரவண பிரசாத் (வயது 52) என்ற பாஜக ஆதரவாளரை கைது செய்தனர். கோவையில் இருந்த சரவண பிரசாத்தை கைது செய்த திருப்பூர் காவல் துறையினர், திருப்பூர் அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் சரவண பிரசாத்தை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதனிடையே சரவண பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் நேற்றிரவு திருப்பூர் மாவட்ட பாஜகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது பொய் வழக்கு போட்டு சரவணபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரவண பிரசாத் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்