பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழையும், ஆன்மிகத்தையும் இரு கண்களாக போற்றிய நம் தமிழகத்து ஆதினங்கள் புனிதநீர் தெளித்து ஆசி வழங்க, தமிழிசையும், தேவாரப் பாடல்களும் ஒலிக்க, நாடு சுதந்திரம் அடைந்த நாளில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில், ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோலை, இரு கைகளிலும் ஏந்தி, கம்பீரமாக வீறுநடைபோட்டு, மக்களவைத் தலைவர் இருக்கை அருகில் பிரதமர் நரேந்திர மோடி வைத்த காட்சி, ஓர் தமிழச்சியாக, இந்திய குடிமகனாக மெய்சிலிர்க்க வைத்தது. ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
சைவ ஆதினங்கள்:
இப்படி ஒரு காட்சியை காண்போம் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தமிழகத்தையும் தாண்டி இந்தியாவையும், தெற்காசிய நாடுகளையும் ஆண்ட சோழ பேரரசர்களின் ராஜகுருவாக இருந்தவர்கள் தான் திருவாவடுதுறை ஆதினம், தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட சைவ ஆதினங்கள். தமிழ் கலாசாரம், பண்பாட்டு வளர்ச்சியில் ஆதினங்களுக்கு பெரும் பங்குண்டு. தமிழையும், சைவத்தையும் அவர்கள் இரு கண்களாகப் போற்றினர்.
தருமபுர ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஆதின மடங்கள்தான். ஓலைச்சுவடிகளில் இருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து நமக்கு அளித்தன. சங்ககால இலக்கியங்கள் உள்ளிட்ட நமது பண்டைய இலக்கியங்களை ஊர் ஊராக தேடிச்சென்று பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஆதின மடங்கள்தான். ஆதினங்கள் இல்லை என்றால் தமிழ்த்தாத்தா இல்லை. அவர் இல்லை என்றால், பல்வேறு தமிழ் இலக்கிய நூல்கள் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும். உலகின் மூத்த மொழி, தொன்மையான மொழி என்பதே உலகிற்கு மட்டுமல்ல, நமக்கும் தெரியாமல் போயிருக்கும். செம்மொழி அந்தஸ்தும் கிடைத்திருக்காது.
ஆனால், தமிழகத்தில் நீதிக் கட்சியும், அதிலிருந்து தோன்றிய திராவிடர் கழகமும், அதிலிருந்து உருவான திமுகவும் செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு ஆதினங்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் குறையத் தொடங்கியது. ஏனெனில் திராவிடர் கழகத்திற்கும் திமுகவுக்கும் தமிழ் பண்பாடு கலாசாரம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் அவர்கள் அனைத்தையும் அழித்தொழிக்க முற்பட்டனர். உலகை ஆண்ட சோழப் பேரரசர்களுக்கு வழிகாட்டியாக, ராஜகுருவாக விளங்கிய, நம் தமிழ் ஆதினங்களை, சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை, கௌரவத்தைக்கூட அளித்ததில்லை.
தமிழ்நாட்டிற்கு பெருமை:
இது போன்ற ஒரு சூழலில் தான் வரலாற்று நிகழ்வான, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழ் சைவ ஆதினங்களை பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பெரும் மரியாதையும் கௌரவமும் அளித்திருக்கிறார். நாடு விடுதலை அடைந்த பிறகு நமக்கு நாமே கட்டியுள்ள நாடாளுமன்றத்தில், திருவாவடுதுறை ஆதினம் அளித்த செங்கோல், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் அமைக்கப்பட்டதும், நாடாளுமன்ற திறப்பு விழாவில் சைவ ஆதினங்கள் கலந்து கொண்டது, ஓதுவாமூர்த்திகளால் தமிழ் தேவாரப் பாடல்கள் ஒலித்ததும், தமிழகத்திற்கும், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தை கடந்து உலகெங்கும் வாழும் பத்து கோடிக்கும் அதிகமான தமிழ் மக்கள் மனதில் பிரதமர் நரேந்திர மோடி நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தமிழகத்திற்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.