கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் சி.ஆர்.பி.எப். என்ற துணை இராணுவ படை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் துணை இராணுவ படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துணை இராணுவ படை வீரர்களின் குடியிருப்புகளும் உள்ளது. இப்பகுதியில் துணை இராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப் வளாகத்தில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை  காப்பு அலுவல் பணியில் ஜெகன் (32) என்ற சி.ஆர்.பி.எப் காவலர் இருந்துள்ளார். 


இந்நிலையில் பணியில் இருந்த போது ஜெகன் திடீரென தன்னைத்தானே எஸ்எல்ஆர் துப்பாக்கியால் இரண்டு ரவுண்டு கழுத்தில் சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்த போது, துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ஜெகன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை சோதித்து பார்த்த போது, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் குளம் பகுதியை சேர்ந்த ஜெகன்,  கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவி விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த விவகாரத்து தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ஜெகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.ஆர்.பி.எப். வளாகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண