தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏபிபி நாடுவிற்கு ப்ரத்யேக பேட்டியளித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்டவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஏபிபி நாடுவிற்கு அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.


கேள்வி: இந்தியாவை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”ஒரு பெயர் வைப்பதில் கூட ஒரிஜினாலிட்டி இல்லை. அதற்குகூட சொந்த மூளையும் இல்லை. இரவல் மூளையை கூட சரிபார்க்க கூட அனுபவமும், பக்குவமும் இல்லை. என்.டி.ஏ. கூட்டணி இந்தியாவிற்குள் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாக பிரித்து போட்டுள்ளார்கள். அது இந்தியா அல்ல. தனித்தனியாக இருப்பது இந்தியாவை பிரிப்பது. இந்தியா என சொல்வதற்கே கூச்சப்பட்டவர்கள், வெட்கப்பட்டவர்கள் இந்தியா என சேர்ந்திருப்பது அரசியல் லாபத்திற்காக தான். முதலில் பெயர் தயார் செய்து விட்டு வாருங்கள். இந்தியாவை ஒருவர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதால், அது நிச்சயம் நிராகரிக்கப்படும்”


கேள்வி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜக பயப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?.


பதில்: "ரொம்ப பயப்படுகிறோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை என ஜெயலலிதா சொன்னார். அதை திரும்ப சொல்வதால் எங்களுக்கு இறுமாப்பு என நினைக்காதீர்கள். மாவட்டத்தில் கூட,  இல்லாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள். நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் எங்களை பயப்படுகிறார்கள் என சொல்கிறார்கள்.”


கேள்வி: எதிர்கட்சிகளை முடக்க ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியதை எப்படி பார்க்குறீர்கள்?


பதில்: ”இதைச்சொல்ல திமுகவிற்கோ, காங்கிரஸ்க்கோ யோக்கியதை இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஏற்கனவே வழக்கு இருக்கும் இடங்களில் மட்டுமே அமலாக்கத்துறை செல்ல முடியும். அதிமுக அமைச்சர்கள் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். அந்த புகாரில் வந்தவர் தான் செந்தில் பாலாஜி. லஞ்சம் கொடுத்ததை திருப்பி கொடுத்தாக அபிடவிட் தாக்கல் செய்த ஒரே அமைச்சர் செந்தில் பாலாஜி தான். 2011 ல் ரெய்டு நடத்தி மிரட்டி காங்கிரஸ் கட்சி 63 சீட் வாங்கியது. எனவே ஈடி, ஐடி, சிபிஐ பற்றி பேச முயலாதீர்கள்.


கேள்வி: பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?


பதில்: ”அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளது. எதுவும் தீர்த்து வைக்கப்படவில்லை. அதில் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பாஜக ஊழல், தேசத்திற்கு எதிரான விஷயங்கள், மக்கள் விரோத விஷயங்களில் யார் ஆதரவு தெரிவித்தாலும் கடுமையாக எதிர்க்கும். இனிமேலும் அப்படித்தான் நடக்கும்.”


கேள்வி : செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரும் பாஜக குற்றப்பின்னணி கொண்ட தனது அமைச்சர்களை நீக்குமா என கேள்வி முதலமைச்சர் எழுப்பியுள்ளாரே?


பதில் : “இதைப்பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது. செந்தில் பாலாஜி பற்றி உலகத்திற்கே தெரியவைத்தவர் ஸ்டாலின் தான். தரக்குறைவாக பேசியவர் ஸ்டாலின் தான். இன்று திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி இருப்பதால் அவருடன் ஸ்டாலின் ஒட்டி உறவாடுகிறார்”


கேள்வி: பாஜக ஆட்சியின் கவுன்ட்டவுன் பெங்களூரில் இருந்து துவங்கி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


பதில் : “பாஜக ஆட்சியின் கவுன்ட்டவுன் என்பது ஸ்டாலினின் கனவு தான். உண்மையில் திமுகவின் கவுன்ட்டவுன் ஏற்கனவே துவங்கிவிட்டது. இரண்டு ஆண்டுகளில் ஊழலின் மொத்த உருவமாக, வளர்ச்சியே இல்லாமல், சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றததால் பொதுமக்கள் நொந்து போய் உள்ளார்கள். தங்களுக்கும் வருமானம் தரும் என்பதால் டாஸ்மாக் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள். திமுக கவுன்ட்டவுன் தொடங்கி ஓராண்டு காலமாகி விட்டது.


கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40க்கு 40 திமுக கூட்டணி கைப்பற்றும் என ஸ்டாலின் கூறியதை எப்படி பார்க்குறீர்கள்?


பதில் : “கனவு காண அவருக்கு உரிமை உள்ளது. இந்த முறை தோசை திருப்பி போடப்படும். 40 க்கு 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.