பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (E.W.S) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தம் செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்" என கூறியுள்ளார்.


இதுவரை இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் (O.C.) உள்ள ஏழைகள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியாமலும் இருந்தனர். இந்த இந்த 'சமூக அநீதி'யை சரி செய்யவே, கடந்த 2019 ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.


'சமூக நீதி' என்பது அனைவருக்கும் 'சம நீதி'யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. ஆனால், தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து, அதன் மூலம் அரசியல் நடத்தி வரும் கட்சிதான் தி.மு.க. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறவில்லை அப்படியொரு பிரசாரத்தை தி.மு.க. செய்து வருகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் மட்டுமல்லது, வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட 60-க்கும் அதிகமான சமூகத்தினர், இந்தப் பத்து சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்த சமூகத்தினரையும் பலி கொடுக்க தி.மு.க. தயாராகிவிட்டது. 


பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கட்டை, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அதனை எதிர்க்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. சட்டத்தில் எங்கும் உயர் ஜாதி ஏழைகள் என்று குறிப்பிடப்படவில்லை. இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத சமூகங்களை, உயர் ஜாதி என்று சட்டம் அழைக்கவில்லை. பொதுப்பட்டியலுக்குள் (OC) வைத்துள்ளது. உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று எதுவும் கிடையாது. சட்டத்தில் இல்லாத ஒன்றை திரும்பத் திரும்ப கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்த சிக்கல்கள் பலவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தீர்வு கண்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க. அரசின் கொள்கை. 


10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மீது அவைகளிலும் விவாதத்திற்கு வந்த போது, அதனை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்தன. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அப்படியெனில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை.


10 சதவீத இட ஒதுக்கீடு பற்றி தவறாக பிரசாரம் செய்யாமல், காலங்காலமாக, இட ஒதுக்கீடு கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.