பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து எனக்கு சில மீடியாக்கள் அழைத்து கேட்டனர். நான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி வெளியிட்டிருக்கின்றனர். நேற்று மாலை முழுவதும் கட்சி பணிகளில் இருந்தேன். தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து இருப்பது தெரிய வந்தது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரியாது.


நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து. மகளிர் அணி தலைவராக பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றேன்”எனத் தெரிவித்தார். வானதி சீனிவாசனை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து பதற்றத்துடன் கார் ஏறி சென்றார்.


முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து விமர்சனம் செய்தற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எதிர்வினையாற்றி இருந்தார். அதை அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். பின்னர் அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது பொய் என அதிமுக தலைவர்கள் கூறி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்தது. அதன் பிறகு தேசிய பாஜக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பாகவும், பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதேசமயம் தான் பேசியது உண்மை, நான் மன்னிப்பு கோரப்போவதில்லை என அண்ணாமலை பேசியது அதிமுக நிர்வாகிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும், அண்ணாமலை மீது புகார் தெரிவிக்கவும், அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று கேரள மாநிலம் கொச்சி வழியாக டெல்லி சென்றனர். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாத நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்துப் பேசினர். அப்போது அண்ணாமலையின் பதவியை பறிக்க வேண்டுமெனவும், கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது.