பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தென் மாவட்டங்கள் பாதிப்பு:


அதில், "மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் பெய்த பெரும் மழையால் கிராமங்கள் கூட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2004 இறுதியில் ஏற்பட்ட சுனாமி போல, பெரு மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மழையில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், கிராமச் சாலைகள் பலத்த சேதமடைந்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், மற்ற மாவட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் நிலைமை என்ன என்பதை அறிய முடியாத அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின்:



இது போன்ற பேரழிவை தென் மாவட்டங்கள் இதுவரை சந்தித்திராத நிலையில், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். இதைவிட பொறுப்பற்றச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

மக்கள் துயரத்தில் இருக்கும்போது, அரசின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் களத்தில் இருக்க வேண்டும். முதலமைச்சரே நேரில் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்போது பணிகள் வேகமெடுக்கும். ஆனால், மக்கள் என்ன பாடு பட்டால் என்ன? எங்களுக்கு அரசியல்தான் முக்கியம். கூட்டணி பேச்சு, கூட்டணி பேரம் தான் முக்கியம் என வாரிசு, ஊழலில் திளைக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பறந்து சென்று விட்டார். இது கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக சென்னை திரும்பி, பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்கள், வீடுகள், உடைமைகளை இழந்தோர், மாடு, ஆடு, கோழிகள் என கால்நடைகளை இழந்தோர், பயிர்கள் சேதமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.

வெள்ள நிவாரணம் என்ற பெயரில் சென்னை மக்களை அலைக்கழிப்பது போல், அலைக்கழிக்காமல் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்கள் பாதிப்பு, ஆடு, மாடு, கோழிகள் இழப்புக்கு தனியாக நிவாரணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.