குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே உள்ள மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர் மேலும் வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு பணிகளை மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் ஏதும் கிடைக்காததால், அவர்களுக்கு உணவு பொருட்கள் அனுப்பும் பணியினை தமிழக அரசு செய்து வருகிறது. அதுபோல தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.




இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு  வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன், பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.


இதேபோல கோவை பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 ஆயிரம் சப்பாத்திகள் உட்பட பல்வேறு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். பட்டணம், பட்டணம் புதூர், பீடம் பள்ளி, நடுப்பாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றாக இணைந்து நிவாரண பொருட்களை தயாரித்து அனுப்பி வைத்தனர். 15000 சப்பாத்திகள், புளி சாதம், 2000 பிஸ்கட்கள், பிரெட், பால், தண்ணீர், மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள்,  தீப்பெட்டிகள், நாப்கின்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன