பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 'பெரிய கோவில்’ என்றழைக்கப்படும், அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இவ்வாலயம், அப்பகுதி மக்களின் உணர்வுகளோடும், அன்றாட வாழ்வியலோடும் கலந்துவிட்ட ஒன்று. மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. முருகப்பெருனானின் வேலை பிடுங்கி, அதனைக் கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் கருவறைக்குள் நுழைந்தும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கின்றன.
இந்நிலையில், கோயில் கோபுரத்தில் பதுங்கி இருந்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மனநிலை சரியில்லாத அவர்தான் சிலைகளை உடைத்து, கருவறைக்குள் அட்டூழியம் செய்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இது நம்பத்தகுந்ததாக இல்லை. கடந்த காலங்களிலும் அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு இவ்வாலயத்தின் திருத்தேர் எரிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு அம்பாள் சன்னதிக்குள் புகுந்து, ஒருவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது மாற்று மதத்தினரின் நூல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பொதுமக்கள் வழிபட்டு வந்த சிலைகள் கடந்த ஆண்டு சேதப்படுத்தப்பட்டன. இப்படி இக்கோயில், குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில் தான், தற்போதைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.
இதற்கெல்லாம் தனி நபர் ஒருவர் தான் காரணம், அதுவும் மனநிலை சரியில்லாதவர்தான் காரணம் என்பதை அவிநாசிலிங்கேஸ்வரரின் பக்தர்கள் யாரும் நம்பவில்லை. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கையற்ற அரசு. மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்து மதப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. மாற்று மதத்தினரின் பண்டிகைகள், விழாக்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஹிந்து மத பண்டிகைகள், கோயில் விழாக்களில் மட்டும் கலந்து கொள்வதில்லை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான சீர்காழி அருள்மிகு சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். ஆனால், முதலமைச்சரோ, அமைச்சர்களோ அங்கு செல்லவில்லை. இயல்பாகவே இந்து மதத்தின் மீதும், இந்து கோயில்கள் மீதும் திமுக அரசு நம்பிக்கையற்று இருப்பதால், கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற சந்தேகம் எப்போதும் எழுகிறது.
எனவே, அவினாசி ஆலயத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஏனென்றால் எப்போதெல்லாம் கோயில் சிலைகள் உடைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், மனநிலை சரியில்லாதவர் என்று ஒருவரை காவல் துறை கைது செய்கிறது. தமிழகத்தில், ஆயிரம் ஆண்டுகள், பல நூறு ஆண்டுகள் பழமையான, பல்லாயிரம் இந்து கோயில்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க, 'தனி பாதுகாப்பு படை' ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை திமுக அரசு உணரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.