திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி மற்றும் கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று அதிகாலை நேரத்தில் அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்துள்ளனர். அப்போது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலைகள் மீது அணிவித்துள்ள துணிகள் மற்றும் அவிநாசிலிங்கேசுவரர் மீது இருந்த பொருட்கள் மற்றும் துணி களைந்துள்ளதை கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கும், அவிநாசி காவல் துறையினருக்கும் அர்ச்சகர்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். இதில் முருகன் சன்னதியில் வெண்களத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனிடையே கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவர் ஒளிந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவிநாசியை அடுத்து சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பதும், இன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சரவண பாரதியை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர் கோயில் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் இன்று கோயிலில் கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை, பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர். இந்த சம்வவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்