கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்திரவிட்டதை வரவேற்கின்றோம். உயிரிழந்த மாணவி மத மாற்றம் குறித்து பேசியிருந்தார். ஆனால் காவல் துறை அதிகாரி அப்படி எதுவும் நடைபெறவில்லை என சான்றிதழ் கொடுக்கின்றார். மற்ற தற்கொலைகளுக்கு உடனடியாக வீடுகளுக்கு சென்று நிதி உதவி கொடுக்கும் முதல்வர், இந்த தற்கொலை வழக்கில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை.
காவல் துறை முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி வந்த நிலையில் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை வேண்டும் என கேட்டு இருந்தனர். தற்போது சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இந்த வழக்கின் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் இழந்து இருக்கின்றார். கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். சிபிஐ விசாரணை என்ற தீர்ப்பின் வாயிலாக ஏழை மாணவிக்கு நீதி கிடைத்து இருக்கின்றது. போராட்டத்தை முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி. தனியாக விசாரணை குழு அமைத்த பா.ஜ.க தலைமைக்கு நன்றி. மாணவி தற்கொலை விவகாரத்தை தேசிய அளவில் எடுத்து செல்கின்றோம்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது தனித்து போட்டி என அறிவித்து இருப்பதால் அவர் சொல்வது அனைத்தையும் நாங்கள் பாலோ செய்கின்றோம்” என அவர் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகளை ஆண்மை இல்லாதவர் பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னதால் தன்னுடையை வலிமையை அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் காட்டுகின்றதா என்ற கேள்விக்கு, ”அப்படி இல்லை” என பதிலளித்தார். விஜய் மக்கள் கட்சியுடன் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அந்த அமைப்பை விட பல இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறோம்” என அவர் பதில் அளித்தார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருக்கின்றது. கூட்டணி குறித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவை அமல்படுத்துவோம். பா.ஜ.க தேசிய தலைமை உள்ளாட்சி தேர்தல் குறித்து வழிகாட்டுதல் அவ்வப்போது மாநில நிர்வாகிகளுக்கு கொடுத்து வருகின்றது. துணை தலைவர் நயினார் நகேந்திரன் பேசிய விவகாரம் குறித்து அதிமுக தலைவர்களை சந்தித்து முழு விளக்கம் கொடுக்கப்பட்டது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுகவுடன் நடத்திய முதல்கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிப்பு மிக்க கட்சி அதிமுக. உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கட்சியினருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டி இருப்பதால் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளோம். அதிமுகவை எதிர்த்து என்ன பிரச்சாரம் செய்ய போகின்றோம் என்பதை பிரச்சாரத்தின் போது பாருங்கள்” என அவர் தெரிவித்தார்.