கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தி நினைவு நாள் உறுதியேற்பு நிகழ்வு கோவை சிவானந்த காலணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது. இந்நிகழ்விற்கு காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலகத்தில் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் மனுவை ஏற்பதாகவோ, நிராகரித்தாகவோ முறைப்படி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நிகழ்விடத்தில் மக்கள் ஒற்றுமை மேடையின் அனைத்து முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் குவிந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த நிர்வாகிகள் உறுதி மொழியேற்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தனர். 




அப்போது காவல் துறையினர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த ப்ளக்ஸ் தட்டிகளை அகற்ற முயன்றனர். இதனால் காவல்துறை மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் சுகுமார் ப்ளக்ஸ் தட்டியில் இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார் என்கிற வாசகம் இடம் பெறக்கூடாது அதனை அகற்றுங்கள் என்றார். இதனால் மேலும் வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ப்ளக்சில் இடம்பெற்றிருந்த இந்து என்கிற வார்த்தையை மட்டும் ஸ்டிக்கர் ஒட்டி நிர்வாகிகள் மறைத்தனர்.  இதனைத் தொடர்ந்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், கோவை மக்கள் ஒற்றுமை மேடையினர் உறுதி மொழியேற்பு நிகழ்வு துவங்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார். அப்போது கோட்சேவால் சுட்டுக் கொன்ற மாகத்மா காந்தி நினைவுநாளில் என்கிற வாசகத்தை படித்ததும், மீண்டும் கூட்டத்திற்குள் குறுக்கே பாய்ந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றான் என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 




இதற்கு ஜி.ராமகிருஷ்ணன் வேறு யார் கொன்றார்கள் என்று தெரிவியுங்கள். கோட்சே தான் கொன்றான் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு தண்டனையே விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினர். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என உதவி ஆனையர் சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். இதற்கு மக்கள் மேடை அமைப்பினர் உண்மையில் என்ன நடந்ததோ அதைத்தான் நாங்கள் உறுதிமொழியாக வாசிப்போம். உங்களுக்கு பிடித்த வகையில் எல்லாம் செய்ய முடியாது முடிந்தால் கைது செய்யுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசித்தார். இதனையடுத்து நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மகாத்மா காந்தியில் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


இதையடுத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ”இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டில் பல பகுதிகளில் இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இத்தகைய கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் எல்லாம் காந்தி நேரிடையாக சென்று அமைதியை ஏற்படுத்தினார். மேற்கு வங்கம் நவகாளியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க அங்கே சென்று உண்ணாநிலை மேற்கொண்டார். இதனையடுத்தே அங்கு அமைதி திரும்பியது. மக்கள் ஒற்றுமை, மத நல்லினக்கம் ஆகியவற்றை தொடர்ந்து மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்தார். இது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லை. தங்களுடைய இந்துத்துவா அஜன்டா காந்தி உயிரோடு இருந்தால் நிறைவேறாது என்றதால்தான் கோட்சே என்கிற மதவெறியனால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆகவே மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க இறுதி வரை போராடி தனது உயிரை தியாகம் செய்த காந்தியடிகளின் நினைவை நாம் அனுசரிக்கிறோம். 




மத்தியில் 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ். அமைப்பின் கொள்கைகளை அமலாக்குகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் வ.உ.சி, பாரதி, வேலுநாச்சியார், மருதுசகோதரர்களின் உருவம் தாங்கிய வாகனத்திற்கும், தமிழகத்தில் தந்தை பெரியாரை போல கேரள மாநிலத்தின் நாராயண குரு உருவம் பொறித்த வாகனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. 72 ஆண்டுகளாக குடியரசு நாளில் காந்தியடிகளின் பாடல்கள் இசைத்து வந்த நிலையில் அதனையும் இம்முறை அனுமதி மறுத்தது. 


காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வேதனையை தருகிறது. அதேபோல் இங்கு நடைபெற்ற சம்பவத்தில் காந்தியை கொன்றது கோட்சே என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என கோவை காவல்துறை சொல்வது வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. காந்தியை கொன்றது கோட்சே தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்து தண்டனை வழங்கியது கூட காவல்துறையினருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது” என்றார்.