பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிள்ளார். அதில், “நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சந்திப்பிலிருந்து தேவம்பட்டு வரை இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடி கட்டிக் கொண்டு பேரணி செல்ல பாஜக இளைஞரணி முடிவு செய்தது. இதற்கு அனுமதி கோரி கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளரிடம், திருவள்ளூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் நரேஷ்குமார் மனு அளித்தார். இதற்கு பதிலளித்துள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர், "தேசியக்கொடி வாகனப் பேரணி செல்லும் இடங்களின் அருகில் பள்ளிகள், கடைகள் அமைந்துள்ளன. எனவே, தேசியக் கொடி வாகனப் பேரணியால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.


காவல் துறை எதற்கு?


கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளரின் இந்த பதில் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அன்னியர் ஆட்சியில், சுதந்திரத்திற்காக போராடிய காலத்தில்தான், தேசியக்கொடி பேரணி நடத்த தடை விதிப்பார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக்கொடி பேரணி நடத்த காவல்துறை தடை விதிப்பதை என்னவென்றுச் சொல்வது? தேசியக்கொடி பேரணி நடத்துவதால் சட்டம்  - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் காவல்துறை எதற்கு?  தேசியக்கொடி பேரணி நடத்தினாலே சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறதா? காவல்துறை செயலிழந்து விட்டதா? அல்லது காவல்துறை சுயமாக செயல்படாமல் யாருடைய உத்தரவின் பெயரில் செயல்படுகிறது? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.


அனுமதியளிக்க வேண்டும்


சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. நாடு இல்லையென்றால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. நாடு நிலையற்று இருந்தால் என்ன நடக்கும் என்பதை நம் அண்டை நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  தேசபக்தியை வளர்க்கும் தேசியக்கொடி வாகனப் பேரணி போன்ற நிகழ்வுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக காவல் துறையே தடை விதிக்கிறது. இதைவிட அவலம் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு, தேசியக்கொடி வாகன பேரணி போன்ற தேசபக்தியை வளர்க்கும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறையினருக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.