கோவை மாவட்டத்தில் கோயில் என்றாலே, பலருக்கும் மருதமலை முருகன் கோயில் தான் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மருதமலை முருகன் கோவில் பிரசிதி பெற்றதாக விளங்குகிறது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் மருதமலை அமைந்துள்ளது. கோவை நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை ஏழில் சூழல் சுப்பிரமணிய சாமி காட்சியளிக்கிறார். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் மருதமலை கருதப்படுகிறது. இந்த கோவில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.
பெயர்க் காரணம்
மருதமலை கோயில் கொங்கு சோழர்களால் முதன்முதலில் அமைக்கப்பட்டது. பின்னர், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்று இத்திருத்தலம் உருவானது. இந்த கோவில் அமைந்துள்ள மலையில் மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால், இம்மலை மருதமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தலத்தின் தலவிருட்சமாக மருதமரம் விளங்குகின்றது. இம்மலையில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், மருத மரங்கள் நிறைந்த மலைக்குத் தலைவன் என்பதாகும். இத்தலப் பெருமான் மருதமலையான், மருதப்பன், மருதாசலமூர்த்தி, சுப்பிரமணிய சுவாமி, தண்டாயுதபாணி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
மலையேறும் பாதைகள்
கோவை நகரில் இருந்து மருதமலை செல்ல தொடர்ச்சியாக நிறைய பேருந்துகள் உள்ளன. மருதமலை அடிவாரம் வரை அரசுப் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் செல்லலாம். மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம். இந்தப் பாதையில் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படும். இதனால் இரவு நேரங்களில் மருதமலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். படிகளில் ஏறி மலையேற முடியாதவர்கள் செல்ல மாற்றுப்பாதையும் உள்ளது. அப்பாதையில் கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். அல்லது தனியார் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லலாம்.
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம். புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், உலோகக் கொடிமரம், மயில்வாகனம் ஆகியவை உள்ளன. முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும், வீரபத்திரரும் உள்ள நிலையில், கருவறையில் தண்டாயுதபாணி காட்சியளிக்கும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பாட்டி சித்தர் குகை
இந்த கோயிலுக்கு அருகில் தெற்கு மூலையில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்கி செல்லும் வகையில் உள்ளன. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது.
இந்த கோவில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை, ஆடி பதினெட்டு, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூச விழா, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரசிதி பெற்ற இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.