கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சி 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை போடப்பட்டது. விளையாட்டு மைதான பணிகளைத் துவக்கி வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உருப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அங்கன்வாடி மையங்கள் பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகளவில் எனது தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவை கட்ட இடம் இல்லாத சூழல் உள்ளது. தமிழக அரசு நகர்புறங்களில் கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிப்பதை விட பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, தற்போது திருமண மண்டபங்கள், வீடுகளில் கூட பார்ட்டி நடத்தினால் அங்கே சரக்கு அடிக்கலாம் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக மக்களிடம் கூறிவிட்டு, இப்படி செய்வதற்கு பதிலாக கடைகளுக்கு பதிலாக மதுபானங்களை டோர் டெலிவரியே பண்ணி விட்டு போயிடலாமே? இந்த மாதிரி வேலை பண்ணுவதற்கு. இது ஏமாற்று விஷயம். திருமண மண்டபங்களில் மது அருந்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்குவது மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது. குடும்பங்கள், பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிப்பது,  மோசமான சீரழிவை நோக்கி அரசு எடுத்து செல்கிறது. சீரழிவை நோக்கி அரசு மக்களை தள்ளுகிறது. இந்த விதிவிலக்கு மற்றும் சட்ட திருத்தம் என்பதை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்ககூடாது.


ஒரு இடத்தில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு வந்தால், 5 கி.மீ. தொலைவுக்குள் வேறொரு இடத்தில் அதே அனுமதியை வைத்து மதுபானக்கடை திறக்கிறார்கள். மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாக செய்ய முடியாததை எல்லாம் மறைமுகமாக செய்கிறது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் ஆளுனரை சந்தித்துள்ளனர். கவர்னர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார் என நம்புகிறோம். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வரும் போது, தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். ஆடியோவின் உண்மை தன்மையை மாநில அரசே நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.  எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறதோ, அவர்கள் மீது சட்ட ரீதியான ஏஜென்சிகள் சோதனை செய்வது என்பது இயல்பு தான். குறிப்பிட்ட நிருவனங்கள் என்று இல்லை. தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்துள்ளதாக சோதனை நடத்தபடுகிறது. அதற்கான விளக்கத்தை கொடுத்தால் சோதனை முடிவுறும். இதற்காக அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ரைடு நடத்த கூடாது என்பதை எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண